ட்ரம்பின் விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி அநுர முக்கிய சந்திப்பு – புதுடில்லியில் இராஜதந்திர நகர்வு.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ‘AI Impact 2026’ மாநாட்டில் பங்கேற்க புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று தனது உத்தியோகபூர்வ சந்திப்புகளை ஆரம்பித்தார்.

அதற்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெற்றது. இதன்போது பிராந்திய ஒத்துழைப்புகள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

புதுடில்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ள ‘AI Impact 2026’ மாநாடு, செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. உலகின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அரச தலைவர்கள் பங்கேற்கும் இம்மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை விசேட உரையாற்றவுள்ளார்.

மாநாட்டின் ஓர் அங்கமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கும் விசேட இரவு விருந்து உபசாரத்தில் ஜனாதிபதி இன்று கலந்துகொள்கின்றார். அத்துடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா, பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோருடன் அவர் இருதரப்புப் பேச்சுகளை முன்னெடுக்கவுள்ளார்:

இன்று முதல் எதிர்வரும் மூன்று தினங்களுக்குப் புதுடில்லியில் தங்கியிருக்கும் ஜனாதிபதி, பல்வேறு இராஜதந்திரச் சந்திப்புகளை முன்னெடுக்கவுள்ளார்.

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகளைப் பலப்படுத்துவதில் இந்த விஜயம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.