இந்தியா – இலங்கை இடையே புதிய இராஜதந்திர அத்தியாயம்: மோடி – அநுர விசேட சந்திப்பு!

அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று இரவு புதுடில்லியில் நடைபெற்றது.

புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்துத் தலைவர்கள் விரிவாகக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் வழங்கப்பட்ட விசேட இரவு விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று, புதுடில்லியில் நடைபெற்று வரும் “AI Impact Summit 2026” சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றுமுன்தினம் இந்தியாவிற்குப் பயணமானார். ஐந்து நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டின் இன்றைய அமர்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, விசேட உரையொன்றையும் நிகழ்த்தினார்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மனித குலத்தின் மேம்பாட்டிற்காகவும், பொறுப்புணர்வுடனும் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச தொழில்நுட்ப ஆளுமை மற்றும் அதன் சவால்களை எதிர்கொள்வது குறித்து ஜனாதிபதி தனது உரையில் முக்கிய விடயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

உலக நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் சர்வதேச தொழில்நுட்பத் துறை சார்ந்த முன்னணி நிறுவனங்களின் பிரதானிகளின் பங்கேற்புடன் நடைபெற்று வரும் இம்மாநாட்டில், சுமார் 20 நாடுகளின் தலைவர்களும், 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் உயர்நிலை பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.