சரணடைய மறுத்த புலிகள்; முறிந்த பேச்சுவார்த்தைகள் 2009 மே 17 இன் பின்னணியை விளக்கும் முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகா.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைந்திருந்தால், அவர்கள் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்கள் என்றும், பிரபாகரன் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்திருப்பார் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், 2009 மே மாதம் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதித் தருணங்கள் குறித்துப் பல முக்கிய இரகசியங்களை வெளிப்படுத்தினார்.
ராஜபக்ஷக்களின்
பேச்சுவார்த்தை
“விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவதற்கு வழிவகுக்கும் வகையில், 2009 மே 17ஆம் திகதி காலை மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷ ஆகியோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அச்சமயம் புலிகளின் தலைவர்கள் சுமார் 400 மீற்றர் பரப்பளவிற்குள் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தனர். இன்னும் சில மணித்தியாலங்களில் தாம் கொல்லப்படுவோம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது” என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
சரணடைய மறுத்த
விடுதலைப்புலிகள்
ராஜபக்ஷக்கள் முன்வைத்த சரணடையும் கோரிக்கையை புலிகளின் தலைவர்கள் நிராகரித்ததாகத் தெரிவித்த அவர், “புலிகள் இராணுவத்திடம் சரணடைய விரும்பவில்லை. மாறாக, அவர்கள் ஒரு மூன்றாம் தரப்பினரிடமே (சர்வதேச அமைப்புகள்) சரணடைய விரும்பினர். ஆனால், ராஜபக்ஷக்கள் அதனை எதிர்த்ததுடன், இராணுவத்திடமே சரணடைய வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது” – என்றார்.
வெளியான
காணொளி
ஆதாரம்
இச்சந்திப்பின் போது, மே 17 மாலை அப்போதைய பாதுகாப்புச் செயலாளருக்கும் சவேந்திர சில்வாவுக்கும் இடையில் நடைபெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் அடங்கிய காணொளி ஒன்றையும் பொன்சேகா வெளியிட்டார்.
“இந்தச் சம்பவங்கள் நடந்தபோது நான் சீனாவில் இருந்தேன். சர்வதேச அமைப்புகளுடனான இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து எனக்கு அறிவிக்கப்படவில்லை. இராணுவத்தினர் புலிகளின் தலைவர்களைக் காப்பாற்ற விரும்பவில்லை; அவர்களை அழிக்கவே திட்டமிட்டிருந்தனர். ராஜபக்ஷக்களின் கோரிக்கையை புலிகள் ஏற்க மறுத்தமையால், மே 19 அன்று இராணுவத்தால் அவர்களை முற்றாக ஒழிக்க முடிந்தது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
