எட்டியாந்தோட்டையில் கோர விபத்து! மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!! – பிள்ளைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில்…

அவிசாவளை – ஹட்டன் பிரதான வீதியின் எட்டியாந்தோட்டை, தனகொலவத்த பகுதியில் நேற்று (20) மாலை இடம்பெற்ற கோர விபத்தில், 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் அவரது மூன்று பிள்ளைகளும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை விமான நிலையத்தில் இறக்கிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பஸ் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின் கம்பத்துடன் மோதியுள்ளது. அதன் பின்னரும் வேகம் குறையாத பஸ், மின் கம்பத்தை உடைத்துக்கொண்டு வீதியை விட்டு விலகி அருகில் இருந்த வீடொன்றுக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், உயிரிழந்த பெண் தனது மூன்று பிள்ளைகளுடன் மாலை நேர வகுப்புக்குச் செல்வதற்காக வீதியோரத்தில் பஸ்ஸுக்காகக் காத்திருந்துள்ளார். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் அவர்கள் நால்வர் மீதும் மோதி கவிழ்ந்துள்ளது.

இவ்விபத்தில் மேலா சதுராணி குலதுங்க (வயது 46) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனத் தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த மூன்று பிள்ளைகளும் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக பஸ்ஸின் சாரதி எட்டியாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கரவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.