ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை தக்கவைக்க இலங்கை தீவிரம் பிரான்ஸ் முழு ஆதரவு வழங்குவதாக உறுதி என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தகவல்.

இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு வலுவூட்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையை மேலும் நீடித்துக்கொள்வதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரடி ஆதரவைக் கோரியுள்ளார்.

இந்தியாவின் புதுடில்லியில் அண்மையில் நடைபெற்ற ‘செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டின்’ பக்க நிகழ்வாக இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சின் போதே இந்த முக்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தற்போது இலங்கைக்குக் கிடைத்து வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை 2026 டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகவுள்ளது. இந்தச் சலுகை இலங்கையின் ஆடைத் தொழில் மற்றும் இறப்பர் உற்பத்திகளுக்கு ஐரோப்பிய சந்தையில் பெரும் வாய்ப்புகளை வழங்கி வருகின்றது. இதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான விண்ணப்பத்தை இலங்கை சமர்ப்பிக்கவுள்ள நிலையில், அதற்குப் பிரான்ஸ் தனது முழுமையான ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி மக்ரோன் இதன்போது உறுதியளித்துள்ளார்.

இந்த இராஜதந்திர வெற்றி குறித்து ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்திய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,

“ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடாக விளங்கும் பிரான்ஸின் ஆதரவு எமக்குக் கிடைத்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமாரவின் கோரிக்கையை ஏற்ற மக்ரோன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க இணங்கியுள்ளார். 2026க்கு பின்னரும் இந்த வரிச்சலுகையைப் பெறுவதற்குத் தேவையான சட்ட மற்றும் மனித உரிமை சார்ந்த பரிந்துரைகளை இலங்கை ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருகின்றது.” – என்றார்.

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைத் தக்கவைக்க, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட 27 சர்வதேச ஒப்பந்தங்களை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில், பிரான்ஸ் போன்ற செல்வாக்குமிக்க நாடுகளின் ஆதரவு இலங்கைக்குப் பாரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.