அக்குரேகொட இரட்டைக் கொலை: 80 சதவீத விசாரணைகள் நிறைவு! 12 விசேட பொலிஸ் குழுக்கள் களத்தில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு.
அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த 13 ஆம் திகதி, அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்கொடி ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

“இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்ற மூன்று நாட்களுக்குள், பிரதான துப்பாக்கிதாரி உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் மூவர் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்” – என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கமளித்தார்.
இக்கொலையுடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்காக 12 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வரும் நாட்களில் இந்த வழக்கில் மேலும் தீர்க்கமான முன்னேற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.
