இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: சிகிச்சை பலனின்றி சாரதி ஒருவர் உயிரிழப்பு! – மற்றைய சாரதி தீவிர சிகிச்சைப் பிரிவில்.
வாதுவை – மொரந்துட்டுவ வீதியின் மெலேகம பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த பஸ் சாரதி ஒருவர், சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை – மொரந்துடுவ வீதியில் இன்று காலை இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போதே, கட்டுப்பாட்டை இழந்த பஸ்கள் ஒன்றோடொன்று மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது என்று ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் இரண்டு பஸ்களின் சாரதிகளும் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சாரதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து காரணமாக மெலேகம பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்தைச் சீர்செய்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
