“சமூக ஊடகங்களுக்குத் தடை!” – 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கர்நாடக அரசு அதிரடித் திட்டம்
கர்நாடகத்தில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு, பெங்களூருவில் புதன்கிழமை (பிப். 26) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மதூ பங்காரப்பா, 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை விதிக்க மாநில அரசுத் திட்டமிட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் பேசுகையில், குழந்தைகள் செல்போன்களை அதிகம் சார்ந்துள்ளது மிகுந்த கவலையளிப்பதாகவும், இந்தப் பிரச்னையில் பெற்றோர்களுக்கும் மிகப் பெரிய பொறுப்புண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அறிவுறுத்தலின்படி சிறார்கள் செல்போனை கைவிட்டு புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்கும் விதமாக மாநில அரசு முக்கிய பிரசாரங்களை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் தேவை அதிகமுள்ள இக்காலத்தில் இத்தகைய தடையைக் கொண்டு வருவது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கர்நாடக அரசின் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
