ஜப்பான் பேரரசரின் பிறந்தநாள் விழா: கொழும்பில் விசேட வரவேற்பு நிகழ்வு!

ஜப்பான் பேரரசரின் 66 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகம் ஏற்பாடு செய்த விசேட வரவேற்பு நிகழ்வு நேற்று (25) கொழும்பிலுள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும், முன்னாள் ஜனாதிபதிகள், சபாநாயகர், அமைச்சரவை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராஜதந்திரப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர்.

வரவேற்பு நிகழ்வுக்குத் தலைமையேற்று உரையாற்றிய ஜப்பான் தூதுவர் இசொமதா, 1964 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று, இறுதிவரை தளராத உறுதியுடன் ஓடி முடித்த இலங்கை தடகள வீரர் ரணதுங்க கருணாநந்தாவின் மனவலிமையை ஒரு சிறந்த உதாரணமாகக் குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாராட்டிய அவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டம் உள்ளிட்ட யென் கடன் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் பாரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கை அரசின் சார்பில் உரையாற்றிய அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜப்பான் பேரரசருக்கும் மக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜப்பானுக்கு மேற்கொண்ட விஜயத்தை நினைவுகூர்ந்த அவர், முதலீடு, கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் இருநாட்டு மக்களுக்கிடையிலான உறவு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்த விழாவில் ஜப்பானிய பாரம்பரியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இகெபானா (மலர் அலங்காரம்), ஹினா-நிங்யோ பொம்மைகள், சாமுராய் தலைக்கவசங்கள் (யோரோய்-கபுடோ) மற்றும் கராத்தே கண்காட்சி ஆகியன இடம்பெற்றன. அத்துடன் விருந்தினர்களுக்கு ஜப்பானிய பாரம்பரிய உணவுகளும் பானங்களும் பரிமாறப்பட்டன.

இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் ஒரு தளமாக இந்த நிகழ்வு அமைந்தது.

Leave A Reply

Your email address will not be published.