மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் புகழுடலுக்கு சிறீதரன் எம்.பி. அஞ்சலி!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர் இரா. நல்லகண்ணுவின் புகழுடலுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியில் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக 101 ஆவது வயதில் காலமான நல்லகண்ணுவின் புகழுடல், சென்னை டி.என்.பி நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்படப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் நல்லகண்ணுவின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், சி.பி.ஐ அலுவலகத்துக்கு நேரில் சென்று அன்னாரது புகழுடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சிறீதரன் எம்.பி., “இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றியமையுடன், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த பெருந்தகை நல்லகண்ணு ஐயாவுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினேன்.
எளிமை, நேர்மை, சமூக நீதி மற்றும் சமத்துவம் ஆகிய உயரிய மதிப்புகளின் உருவாக வாழ்ந்த அவர், தலைமுறைகள் கடந்தும் வழிகாட்டும் ஒளியாக நிலைத்திருப்பார்.
அவரது மறைவு அரசியல் உலகிற்கும், சமூக நீதிக்காகப் போராடும் மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.” – என்று தெரிவித்துள்ளார்.
