“முதுகெலும்பு இருந்தால் நேரில் விவாதித்திருக்கலாம்” – நாமல் சார்பாக வீரசேகர சவால்.

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஒன்றியங்களில் உரை நிகழ்த்தச் சென்ற நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக, தமிழ் மாணவர் அமைப்புகள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து முன்னாள் அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் நாமல் ராஜபக்ஷ அங்கு சென்றிருந்தபோது, அவருடன் விவாதிப்பதற்கும் கேள்விகளை எழுப்புவதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், தமது பாதுகாப்பைக் காரணம் காட்டி, அவர் முன்னால் நேரடியாகக் கேள்வி கேட்கத் தம்மால் முடியாது எனத் தமிழ் மாணவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் நாமல் ராஜபக்ஷவின் ஆளுமைக்கு முன்னால் முதுகெலும்புடன் நின்று பேச இவர்களுக்குத் திராணியில்லை என்பது உறுதியாகியுள்ளது.

சுதந்திரமான பேச்சு மற்றும் விவாதங்களுக்குப் புகழ்பெற்ற இத்தகைய சர்வதேச பல்கலைக்கழகங்கள், பிரிவினைவாத தமிழ் மாணவர் அமைப்புகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து தமது மரபுகளைக் கைவிட்டமை வருத்தத்திற்குரியது. இவ்வாறான சக்திகளின் அழுத்தங்களுக்குப் பணியாமல், ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற நிறுவனங்கள் எதிர்காலத்தில் தமது கொள்கைகளை உறுதிப்பட நிலைநாட்ட வேண்டும்.

தற்போதைய அரசு புலம்பெயர் தமிழ் அமைப்புகளைத் திருப்திப்படுத்துவதற்காகவே செயற்படுகின்றது. ‘டயஸ்போரா’வுக்கு நோகும் என்பதாலேயே ஜனாதிபதி இன்று ‘ரணவிருவா’ (இராணுவ வீரர்கள்) என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. சுதந்திர தினத்தில் இராணுவத் தளபாடங்களைக் காட்சிப்படுத்தாமைக்கும் இதுவே காரணமாகும்.

சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சூழ்ச்சியாளர்களின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், மஹிந்த ராஜபக்ஷ போரை வென்று ஈழக் கனவைத் தகர்த்த காரணத்தினாலேயே, ராஜபக்ஷ குடும்பத்தின் மீது சர்வதேசமும் டயஸ்போராவும் இன்றும் தீராத வைராக்கியம் கொண்டுள்ளன.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.