சட்டத்தின் பிடியிலிருந்து எவருமம் தப்ப முடியாது! – அர்ஜுன மகேந்திரன் விவகாரத்தில் அரசு கடும் எச்சரிக்கை.
மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேகநபரான முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு அழைத்து வருவது ஒரு சிக்கலான செயல்முறை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அர்ஜுன மகேந்திரனை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதற்காக அரசு தற்போது உயர்மட்ட இராஜதந்திர தலையீடுகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், எனினும் இது ஒரு எளிய நடைமுறை அல்ல என்பதையும் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூர் அரசின் சட்ட திட்டங்கள் மற்றும் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
சந்தேகநபர் நாட்டில் இல்லாத போதிலும், அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
“அர்ஜுன மகேந்திரனை நாட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடரும். அவரை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான இராஜதந்திர முயற்சிகளை நாம் கைவிடவில்லை.” – என்றும் அவர் கூறினார்.
பிணைமுறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய எவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று உறுதியளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தவறு செய்தவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதே அரசின் இறுதி நோக்கம் என்றும் மேலும் தெரிவித்தார்.
