36 ஆயிரம் சிகரெட்டுகளுடன் இளைஞர் ஒருவர் சிக்கினார்!
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான சிகரெட்டுகளுடன் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
நேற்று சனிக்கிழமை இரவு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் விசேட சோதனையொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இளைஞர் ஒருவரை வழிமறித்துச் சோதனை செய்தபோது இக்கடத்தல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சந்தேகநபரின் உடமைகளைச் சோதனையிட்டபோது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட சுமார் 36 ஆயிரம் சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அப்பலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டிலிருந்து இந்தச் சிகரெட் தொகுதியைக் கொண்டு வந்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமும், கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகுதிகள் தொடர்பிலும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
