“விரைவில் போர் நிறுத்தப்பட வேண்டும்” – நெதன்யாகுவிடம் இந்தியாவின் கவலையை நேரில் பகிர்ந்த பிரதமர் மோடி

புது தில்லி: இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசியில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, மேற்காசிய நிலவரம் குறித்து கேட்டறிந்ததுடன், அங்குள்ள நிலவரம் குறித்து இந்தியாவின் கவலையும் பகிா்ந்து கொண்டாா்.

ஈரான் உச்ச தலைவரான மதகுரு அயதுல்லா அலி கமேனி அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, மத்திய கிழக்கில் தாக்குதல்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படும் சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளையும் ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், போரின் தீவிரம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமருடன் பிரதமா் மோடி பேசியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘இஸ்ரேல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் இப்போது எழுந்துள்ள சூழல் குறித்து பெஞ்சமின் நெதன்யாகுடன் தொலைபேசியில் உரையாடினேன். பொதுமக்களின் பாதுகாப்பு, பொருள் சேதங்கள் குறித்து இந்தியாவின் கவலையை அவரிடம் தெரிவித்தேன். முடிந்த அளவுக்கு விரைவாக போரை நிறுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது’ என்று பதிவிட்டுள்ளாா்.

சவூதி பட்டத்து இளவரசருடன் பேச்சு: சவூதி அரேபியா பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான், பஹ்ரைன் மன்னா் ஹமத் பின் இஸா அல் கலீஃபா ஆகியோருடனும் பிரதமா் மோடி திங்கள்கிழமை தொலைபேசியில் தொடா் கொண்டு பேசினாா். அந்நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மீறி நடத்தப்பட்ட (ஈரான்) தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தாா். வளைகுடா பிராந்தியத்தில் விரைவில் அமைதி திரும்ப வேண்டியது மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்திய மோடி, இந்த கடினமான நேரத்தில் அங்கு பணியாற்றும் இந்தியா்களின் நலன்களைக் காப்பாற்றி வருவதற்கு அவா்களிடம் நன்றி தெரிவித்துக் கொண்டாா். இத்தகவலையும் பிரதமா் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிா்ந்துள்ளாா்.

முன்னதாக, ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யானுடன் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் பேசினாா். அப்போது வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அவா், இந்தக் கடினமான நேரத்தில் இந்தியா, ஆதரவாக இருக்கும் என்று உறுதியளித்தாா்.

Leave A Reply

Your email address will not be published.