மத்திய கிழக்கு போர்: 10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு பற்றி சஜித் தலைமையில் எதிரணி தீவிர ஆலோசனை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் ஆராயப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:-

10 இலட்சம்
தொழிலாளர்களின்
பாதுகாப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது பணிபுரிந்து வரும் சுமார் பத்து இலட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து இக்கூட்டத்தில் மிகுந்த கவலை வெளியிடப்பட்டது.

போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு எவ்வாறான அவசரத் திட்டங்களை வைத்துள்ளது என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இறக்குமதி மற்றும்
ஏற்றுமதி பாதிப்புகள்

இலங்கைக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையே நிலவும் வர்த்தகத் தொடர்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து பெறப்படும் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகள், ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி மற்றும் ஏனைய வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதால் நாட்டுக்கு ஏற்படும் அந்நியச் செலாவணி இழப்பு என்பன குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அரசுக்கான அழுத்தம்

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை வழங்கவும் அரசு அதிக அவதானம் செலுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பான எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை அரசிடம் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

மத்திய கிழக்கு நெருக்கடியானது வெறும் சர்வதேசப் பிரச்சினை மட்டுமல்ல, அது இலங்கையின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துடன் நேரடித் தொடர்புடையது என்பதை இக்கூட்டம் கோடிட்டுக் காட்டியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.