மத்திய கிழக்கு போர் எதிரொலி: 205 விமான சேவைகள் இரத்து! – சுற்றுலாப் பயணிகளுக்கு காலவரையற்ற விசா நீடிப்பு.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இலங்கையுடனான சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்தார்.
அமைச்சின் வளாகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய நிலவரப்படி மொத்தம் 205 விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
நாட்டுக்கு வரவிருந்த 107 விமானங்களும், புறப்படவிருந்த 98 விமானங்களுமாக மொத்தம் 205 விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக வெளிநாட்டவர்களுக்கு 2 வார கால விசா நீடிப்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு, அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதற்கும் (அவர்கள் நாடு திரும்பும் வரை) எவ்விதக் கூடுதல் கட்டணமுமின்றி விசா வசதிகளை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு இரு முக்கிய உத்தரவாதங்களை வழங்கியுள்ளோம்.
இரத்துச் செய்யப்பட்ட பயணச் சீட்டுகளுக்கான முழுப் பணத்தையும் எவ்விதக் கூடுதல் கட்டணமுமின்றித் திரும்பப் பெறலாம் அல்லது, மாற்று விமானப் பயணங்களுக்கு எவ்வித மேலதிகக் கட்டணமுமின்றி மாற்றிக்கொள்ள வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
மத்திய கிழக்கு வான்பரப்பைத் தவிர்த்து, மாற்று வழிகள் ஊடாக ஐரோப்பாவுக்கான விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இதற்கு அதிக எரிபொருள் செலவாகும் என்பதனால் நிலைமை சீரடையும் வரை விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் பொதிகளை மட்டுப்படுத்த வேண்டி வரும்.” – என்றார்.
