சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக உயர்நீதிமன்றில் உரிமை மீறல் மனு – உயிருக்கு ஆபத்து எனக் குடும்பத்தினர் அச்சம்.

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைச் சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதிவாதிகளாகப் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சுரேஷ் சலேயின் கைது சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் கடும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உணவில் விஷம் கலந்து அவரைக் கொலை செய்ய முயற்சி இடம்பெறலாம் எனக் குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, வீட்டிலிருந்து சமைத்த உணவை அவருக்கு வழங்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரைக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்துக்கு வெளியே அழைத்துச் சென்று, அவரது உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.