மனிதாபிமான அடிப்படையில் ஈரானியக் கப்பலை பொறுப்பேற்கிறோம் – ஜனாதிபதி அநுரகுமார அதிரடி அறிவிப்பு.
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் இயந்திரக் கோளாறு காரணமாகத் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டாவது ஈரானியக் கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேரின்’ கப்பலை மனிதாபிமான அடிப்படையில் பொறுப்பேற்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை இரவு ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
திருகோணமலைக்கு
மாற்றப்படும் கப்பல்
“இந்தக் கப்பலை கொழும்புத் துறைமுகத்துக்குக் கொண்டு வராமல், திருகோணமலைத் துறைமுகத்துக்குக் கொண்டு சென்று அங்கு தரித்து நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள 208 பணியாளர்களும் முதலில் கொழும்புத் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் வெலிசர கடற்படை முகாமில் தங்கவைக்கப்படவுள்ளனர்.
சமூக ஊடக
வதந்திகளுக்கு
முற்றுப்புள்ளி
ஈரானியக் கப்பலில் 300 குழந்தைகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் இத்தகைய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்” – என்று ஜனாதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நடுநிலைமையும்
இறையாண்மையும்
இந்த நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மேலும் தெளிவுபடுத்தியதாவது:-
“இலங்கை எந்தவொரு நாட்டிற்கும் சார்பாகச் செயல்படாமல், சர்வதேச கடல் சட்டங்களைப் பின்பற்றி நடுநிலையாகவே இந்த முடிவை எடுத்துள்ளது.
இது போர் தொடர்பான உதவி அல்ல. கடலில் தத்தளிக்கும் மனித உயிர்களைக் காப்பாற்றும் மனிதாபிமான நடவடிக்கை மட்டுமே.
இலங்கையின் நிலம், கடல் அல்லது வான்வெளி எந்தவொரு நாட்டுக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட இடமளிக்கப்பட மாட்டாது.
திருகோணமலை துறைமுகத்தின் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
சர்வதேச இராஜதந்திரப் பேச்சுகளின் அடிப்படையில், அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றியே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.” – என்றார்.
