நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது உயர்வு: சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்து.

இந்த அரசு தனிநபர் சார்ந்த அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர முயல்கின்றது எனவும், இவ்வாறான திருத்தங்களுக்கு முன்னர் ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் சர்வசன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அரசு இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்தால் கட்டாயமாகச் சர்வசன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தனிநபர் சார்ந்த அரசமைப்புத் திருத்தத்துக்குச் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே மேடையில் இணைந்துள்ளன.

கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ரணில் விக்கிரமசிங்க உட்படச் சகல எதிர்க்கட்சிகளின் அனைத்துக் குழுக்களும் ஒன்றுகூடின. ஜனநாயகத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதுமே இதன் நோக்கமாகும். ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவதைக் கண்டு அரசு பயந்துள்ளது. பொதுவான தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் இணைந்து செயற்படச் சிவில் அமைப்புகளையும் இணைத்து விசேட குழு ஒன்றும் நியமிக்கப்படவுள்ளது.

உயர் நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது வழக்குத் தாமதங்களைத் தடுப்பதற்காக என்ற அரசின் வாதம் தவறானது. நீதிமன்றச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதும் வெற்றிடங்களை நிரப்புவதுமே சரியான வழியாகும். இது குறித்து நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார்.

தற்போதைய அரசு தனிநபர் சார்ந்த அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர முயல்கின்றது. முன்னர் ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் இவ்வாறான தனிநபர் சார்ந்த திருத்தங்களுக்குச் சர்வசன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, அரசு இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்தால் கட்டாயமாகச் சர்வசன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும்.

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது அதிகரிப்புக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவிப்பதைக் கண்டித்து, தேசிய மக்கள் சக்தி நாடா ளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்ற வரப்பிரசாதங்களைப் பயன்படுத்திச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு எதிராக அவதூறு பரப்பியதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.