அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஊடுருவியதா? – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி.
நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, தேசிய பாதுகாப்பு உச்சக்கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நுழைந்ததா என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியபோது, நாட்டின் கடல்சார் பாதுகாப்பு குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இலங்கையின் நிலப்பகுதியிலிருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால், எமது பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வந்திருந்தது உங்களுக்குத் தெரியாதா? ‘ஐரிஸ் டென்னா’ எனப்படும் ‘மௌட்ஜ் ரக’ போர்க்கப்பல் மீது, நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ‘மார்க் 48’ ரக ஏவுகணை ஏவப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய பாதுகாப்பு பலமாக இருப்பதாகக் கூறும் அரசிடம், 40 கடல் மைல் தொலைவில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் வருவதைக் கண்டறியும் தொழில்நுட்பம் இல்லையா? எம்மிடம் மேற்பரப்பு ரேடார், சோனோபாய்ஸ், நீருக்கடியிலான சோனார் வலையமைப்புகள் அல்லது செயற்கைக்கோள் கண்காணிப்பு வசதிகள் இல்லையா?
கடலில் 208 பேர் காப்பாற்றப்பட்டமை பாராட்டுக்குரியது என்றாலும், அதற்கு முன்னதாக 130 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை கவலைக்குரியது. சம்பந்தப்பட்ட போர்க்கப்பல் இலங்கையின் 12 கடல் மைல் எல்லைக்குள் இருந்திருந்தால், அந்த 130 உயிர்களையும் காப்பாற்றியிருக்க முடியும்
அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும் சூழலில் இவ்வாறான ஊடுருவல்கள் நடப்பது, நாட்டின் தேசிய பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதைக் காட்டுகின்றது.” – என்றார்.
