மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி தோட்டத் தொழிலாளி பரிதாப மரணம்!
மட்டக்களப்பு, செங்கலடி – பதுளை வீதியில் அமைந்துள்ள சின்னப்புல்லுமலை கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், மட்டக்களப்பு, நொச்சிமுனைப் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சோமசுந்தரம் அரிச்சந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
சின்னப்புல்லுமலை கிராமத்திலுள்ள தோட்டம் ஒன்றில் தங்கி வேலை செய்து வந்த மேற்படி நபர், வழமை போல் நேற்று இரவு தோட்டத்திலுள்ள வாடியில் உறங்கிக் கொண்டிருந்தார். இதன்போது அங்கு வந்த காட்டு யானை வாடியை உடைத்துத் தாக்கியுள்ளது.
உறக்கத்திலிருந்து விழித்த அவர், வாடியிலிருந்து தப்பி ஓட முயன்றபோது யானை அவரைத் துரத்திச் சென்று தாக்கியுள்ளது. யானை அவரது முகத்தில் காலால் மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ். நசீர் வைத்தியசாலைக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
