தொடர் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் வசமாகச் சிக்கினார் – பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைப்பு.

புத்தளம், வென்னப்புவ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வீதியில் செல்லும் பெண்களை இலக்கு வைத்துத் தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்டு வந்த நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வென்னப்புவ – வைக்காலை, அங்கம்பிட்டிய பிரதேசத்தில் வைத்தே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை, வைக்காலை பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைச் சந்தேகநபர் அறுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோட முயன்றுள்ளார். இதன்போது, பாதிக்கப்பட்ட பெண் எழுப்பிய அபயக் குரலையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் சந்தேகநபரைத் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.

பிடிபட்ட நபர் வென்னப்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைகளின் போது, அவர் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை வீதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்துடன், கொள்ளைச் சம்பவங்களுக்கு அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? அல்லது இவருடன் வேறு எவருக்கும் தொடர்புள்ளதா? என்பது குறித்து வென்னப்புவ பொலிஸார் பல்வேறு கோணங்களில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.