தேர்வில் Chat GPT மூலம் காப்பியடிக்க உதவி: மகாராஷ்டிராவில் 81 தேர்வு ஊழியர்கள் அதிரடி இடைநீக்கம்!
பொதுத்தேர்வில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட உதவிய 81 தேர்வு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தேர்வுகளின் போது மாணவர்கள் மோசடி செய்ய உதவிய ஆசிரியர்கள் உள்ளிட்ட 81 தேர்வு ஊழியர்களை மகாராஷ்டிரா மாநில இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது.
Chat GPT செயலி மூலம் மாணவர்கள் காப்பியடிக்க உதவியதை தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் ஆய்வு செய்த போது கண்டறிந்துள்ளனர்.
இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் தேர்வு மைய இயக்குநர்கள், மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் பிற தேர்வுப் பணியாளர்கள் முறைகேட்டைத் தடுக்கத் தவறியதற்கு பொறுப்பானவர்கள் எனக் கண்டறியப்பட்டது.
பீட், சத்ரபதி சம்பாஜிநகர், ஜல்னா, கட்சிரோலி, வாஷிம், நான்டெட் மற்றும் தாராஷிவ் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக வாஷிம் மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் 12 ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வின் போது 581 மாணவர்கள் பார்த்து எழுதியதாக பறக்கும் படை கண்டறிந்து மையத்திலிருந்து மொபைல் போன்களை மீட்டது.
இதில், 28 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். வேறு சில மையங்களில் ஆங்கிலத் தேர்வின் போது பார்த்து எழுத உதவியதாக 38 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
கற்றலுக்கு பயன்படுத்த வேண்டிய AI தொழில்நுட்பத்தை தேர்வில் காப்பியடிக்க மாணவர்கள் பயன்படுத்தியதும், அதற்கு ஆசிரியர்கள் உதவியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் வேறு யார் தவறிழைத்திருந்தாலும், அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிரா மாநில இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
