வைரல் காணொளியால் சிக்கிய வீதிச் சண்டியன் – பொலிஸாரின் கழுகுப் பார்வையில் வீழ்ந்த அபாயகரமான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்.
பொதுமக்களுக்கும் ஏனைய வாகனங்களுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில், வீதியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞர் ஒருவர் நவகத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிய காணொளி ஒன்றை ஆதாரமாகக் கொண்டே இந்தக் கைது நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரு இளைஞர்கள் வீதியில் அபாயகரமான முறையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி, ஏனைய பயணிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவியது. இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், அந்த மோட்டார் சைக்கிள் ஆனமடுவ பகுதியை நோக்கிச் செலுத்தப்பட்டதை உறுதிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நவகத்தேகம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, நேற்று மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இதன்போது அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் ஆனமடுவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், நவகத்தேகம பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
