ஒரே நாளில் 925 போதைப்பொருள் சந்தேகநபர்கள் கைது!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 925 பேர் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 927 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 10 பேர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருள்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, ஒரு கிலோகிராம் 107 கிராம் ஹெரோயின், ஒரு கிலோகிராம் 994 கிராம் ஐஸ், 2 கிலோகிராம் 163 கிராம் கஞ்சா, 55 ஆயிரத்து 229 கஞ்சா செடிகள், 57 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 76 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 997 போதை மாத்திரைகள், 137 கிராம் மதனமோதகம் மற்றும் 320 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.