ஆயுதங்களுடன் சிக்கிய போதைப்பொருள் படகுகள் – திக்கோவிட்டையில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆய்வு.

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சுமார் 478 கிலோகிராம் ஐஸ், 176 கிலோகிராம் ஹெராயின் மற்றும் நவீன ரக துப்பாக்கிகளுடன் இரண்டு பல நாள் மீன்பிடிப் படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது படகுகளில் இருந்த 10 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களும் நேற்று திக்கோவிட்டை மீன்பிடித் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டன. அங்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட மற்றும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.

கடற்படையினர் ஆழ்கடல் பகுதியில் மேற்கொண்ட நீண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போதே இந்த பாரிய கடத்தல் முறியடிக்கப்பட்டது. இதன்போது போதைப்பொருள்களுடன் மூன்று இயந்திரத் துப்பாக்கிகள், எட்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் எட்டு தொடர்பாடல் சாதனங்களும் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில்,

“தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் வலையமைப்புகளை முடக்குவதிலும் முப்படைகளும் பொலிஸாரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 75 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 14 படகுகள் போதைப்பொருளுடன் சிக்கியுள்ளன.” – என்றார்.

மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருவதாகவும், கடத்தல்காரர்கள் தொடர்பான தகவல்களை 1818 மற்றும் 1997 ஆகிய இலக்கங்களுக்கு வழங்குமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள், ஆயுதங்கள் மற்றும் படகுகள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.