அரசு மீது விமல் பகிரங்கக் குற்றச்சாட்டு சிறைக்குள் சுரேஷ் சலேவ படுகொலை செய்ய முயற்சி!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை, சிறைக்குள் வைத்து கொலை செய்ய அரசு முயற்சிக்கின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல் பழிவாங்கலுக்காகவே அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். சுத்தமில்லாத ஒரு சிறையினுள் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் தொடர்பாக நீதிமன்றத்துக்கு இதுவரை முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் எலிகள் ஓடித்திரியும் ஓர் அசுத்தமான சிறையிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சுகாதார வசதியற்ற மலசலகூடத்துக்கு அருகில் அவர் வைக்கப்பட்டுள்ளதால், அவர் கடுமையான நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில் அவரை வைத்திருப்பதன் மூலம், சிறைக்குள்ளேயே அவரைப் படுகொலை செய்ய அரசு முயற்சிக்கின்றது. அரசின் இந்த முறையற்ற செயற்பாட்டுக்கு இடமளிக்க முடியாது.

சுரேஷ் சலேவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி, கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்பாகப் பாரிய சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராகவுள்ளோம். நாட்டின் மக்கள் அனைவரும் இந்த நீதிக்கான போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.