லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள்! இரு பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்!! – ஒரு பிள்ளை படுகாயம்.
குருநாகல், மாஸ்போத பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரு பிள்ளைகளின் தாயான 39 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் அமர்ந்து பயணித்த அவரது பிள்ளையும் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி தாய், முன்னால் சென்ற வாகனமொன்றை முந்திச் செல்ல முற்பட்டுள்ளார். இதன்போது, எதிர்த்திசையில் இருந்து அதிவேகமாக வந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற தாய் பலத்த காயங்களுக்கு உள்ளாகி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த பிள்ளைக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள குருநாகல் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
