பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள்: ஜனாதிபதியின் மௌனம் ஏன்? – தயாசிறி எம்.பி. பகிரங்கக் கேள்வி.

சபாநாயகர் மற்றும் அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மௌனம் காப்பது ஏன் என எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. எமது நிறுவனச் சட்டக்கோவையின் 27ஆவது பிரிவின்படி, ஓர் அரச அதிகாரிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அவர் உடனடியாகப் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும். ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 162ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதி, அமைச்சர்கள் என அனைவரும் ‘அரச அதிகாரிகள்’ என்ற வரைவிலக்கணத்துக்குள் அடங்குவர். எனவே, சட்டத்தின் ஆட்சியை மதிப்பதாகக் கூறும் ஜனாதிபதி, உடனடியாகக் குமார ஜயகொடியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்.

தற்போதைய சபாநாயகருக்கு எதிராகப் பல பாரதூரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 125 மற்றும் 127ஆவது பிரிவுகளின்படி, தன் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளபோது அது குறித்து ஊடக சந்திப்புகளை நடத்துவது சட்டவிரோதமானது. ஆனால் சபாநாயகர் அதனைச் செய்துள்ளார். பல குற்றச்சாட்டுகள் உள்ள ஒருவர் சபாநாயகராகச் செயல்படும்போது, அவரிடமிருந்து எமக்கு நீதி கிடைக்காது. நாடாளுமன்றத்தில் நாம் பேச முற்படும்போது எமக்கு இடமளிக்கப்படுவதில்லை.

முன்னைய சபாநாயகர் ஒருவர் கலாநிதி பட்டம் இல்லை என்ற காரணத்துக்காக நீக்கப்பட்டார். ஆனால், இன்றைய சபாநாயகர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தும் அவர் பதவியில் நீடிக்கின்றார். தனது நண்பர் என்பதற்காகக் குமார ஜயகொடிக்கு அமைச்சுப் பதவியை வழங்கிய ஜனாதிபதி, தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து என்ன கூறப்போகின்றார்? முறைகேடுகளில் தொடர்புடையவர்களை உடனடியாகப் பதவிகளிலிருந்து நீக்க வேண்டும். எமது அரசின் கீழ் சபாநாயகருக்கு எதிராக நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.