பெண் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை! – இரத்தினபுரியில் பயங்கரம்.

இரத்தினபுரி – அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தூல்கல பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

நேற்று காலை தூல்கல பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் பெண் ஒருவர் கழுத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்கின்றார் என்று அயகம பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருந்த பெண்ணை மீட்டு அயகம வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தக் கொலையைச் செய்த சந்தேகநபர்கள் யார்? அல்லது எதற்காக இந்தக் கொலை செய்யப்பட்டது? என்பது குறித்த எந்தத் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை அயகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.