மின்வெட்டைத் தவிர்க்க முடியாது! – வலுசக்தி அமைச்சர் பகிரங்க ஒப்புதல்.

அரசு எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், எதிர்காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதைத் தவிர்க்க முடியாமல் போகலாம் என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த அதிர்ச்சிகரமான உண்மையைப் பகிரங்கப்படுத்தினார்.

மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக எரிசக்தித் துறையில் பாரிய சவால்கள் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய நிலவரம் குறித்து மேலும் கூறுகையில்,

நிர்வாகத் திறமை

“மத்திய கிழக்கு மோதல்கள் வெடித்த போதே மின்வெட்டு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரசு எரிசக்தித் துறையைச் சரியாக முகாமைத்துவம் செய்ததாலேயே இதுவரை மின்வெட்டு இன்றி மின்சாரத்தை வழங்க முடிந்தது.

தவிர்க்க முடியாத சூழல்

மின்வெட்டைத் தவிர்க்க அரசு தனது உச்சக்கட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றது. இருப்பினும், ஒரு கட்டத்தில் மின்சார விநியோகத்தைத் தடை செய்ய வேண்டிய நிலைமை உருவாகலாம்.

தொடர் கண்காணிப்பு

தற்போதைய இக்கட்டான சூழலை அதிகாரிகள் மிக நெருக்கமாகக் கண்காணித்து வருகின்றனர் என்றும், முடிந்தவரை நீண்ட காலத்துக்குத் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் இதன்போது சபையில் உறுதியளித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சபையில் முன்வைத்த தரவுகள் மற்றும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து அமைச்சரின் இந்தப் பதில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.