தேசியக் கொடியை இறக்கிக் கறுப்புக் கொடி ஏற்றிய விவகாரம்: யாழ். பல்கலை மாணவர்களுக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அழைப்பு!

கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தன்று, யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கி, கறுப்புக் கொடி ஏற்றிய சம்பவம் தொடர்பில் மாணவர் தலைவர்கள் உள்ளிட்ட மூவரை விசாரணைக்கு சமூகமளிக்குமாறு யாழ். மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் நேரடி ஆலோசனையின் கீழ் இந்த விசாரணை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரியினால் யாழ். பல்கலைக்கழகப் பதிவாளருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் பின்வரும் மூன்று மாணவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

* தர்மலிங்கம் ஜதுர்சன் (கலைப்பீட மாணவர் சங்கத் தலைவர்)
* தயாபரன் லஜிதரன் (சிரேஷ்ட மாணவர் சங்கத் தலைவர்)
* ஏ. அபிசேக்

சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை இறக்கி தரையில் எறிந்துவிட்டு, அதற்குப் பதிலாகக் கறுப்பு நிறக் கொடியை ஏற்றியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வாக்குமூலங்களைப் பதிவு செய்யவே இவர்களைக் குற்றத்தடுப்புப் பிரிவில் முன்னிலையாகுமாறு கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளது.

மாணவர் ஒழுக்காற்று அதிகாரிகளால் இந்தக் கடிதம் இன்று காலை மாணவர்களிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

“பதிவாளருக்கு முகவரியிடப்பட்ட கடிதத்தை வைத்துக்கொண்டு மாணவர்கள் எப்படி பொலிஸ் நிலையம் செல்ல முடியும்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன், மாணவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது எனவும் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர்.

இது குறித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவசர ஆலோசனைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கு எதிராகக் கடுமையான உள்ளக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும், எதிர்காலத்தில் இத்தகைய தேச விரோதச் செயல்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ளுமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.