உலகளாவிய போரின் தாக்கத்தை எதிர்க்கட்சியினர் உணர வேண்டும் – பிரதி அமைச்சர் சுனில் வடகல காட்டம்.

உலகளாவிய ரீதியில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிசக்தி நெருக்கடியின் யதார்த்தத்தை உணராமல், எதிர்க்கட்சியினர் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:-

“தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி குறித்து எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் வாதங்கள் நகைப்புக்குரியவை. உலகம் முழுவதும் எரிபொருள் அல்லது மின்சாரத் தட்டுப்பாடு நிலவினாலும், இலங்கையில் மட்டும் அவை தாராளமாக இருக்க வேண்டும் என்ற பிடிவாதமான நிலைப்பாட்டிலேயே அவர்கள் உள்ளனர். சர்வதேச ரீதியிலான போரின் தாக்கம் இலங்கைக்கும் ஏற்படும் என்பதை அவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள்.

உலகில் போர்ச் சூழல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் பரவாயில்லை, தமக்கு மட்டும் எரிபொருளும் மின்சாரமும் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சியினரின் ஒரே நோக்கமாக உள்ளது. சர்வதேச நெருக்கடிகளைப் பொருட்படுத்தாது, பொருத்தமற்ற உதாரணங்களைக் கூறி மக்களைத் திசைதிருப்ப அவர்கள் முயற்சிக்கின்றனர்.” – என்றார்.

தற்போதைய உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், நாட்டின் வளங்களைச் சரியான முறையில் முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும், அதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதையும் பிரதி அமைச்சர் சுனில் வடகல இதன்போது வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.