மத்திய கிழக்கு போர்ச் சூழல்: பொருளாதாரப் பாதிப்புகளைக் குறைக்க ஜனாதிபதி அநுர அவசர அறிவுறுத்தல்கள்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மத்திய கிழக்கின் போர்ச் சூழலால் உலகளாவிய வலுசக்தி விநியோகக் கட்டமைப்பு பாரியளவில் சீர்குலைந்துள்ளது. இதனால் உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள வலுசக்தி நெருக்கடி மற்றும் எதிர்வரும் மாதங்களில் உலகச் சந்தையில் ஏற்படக்கூடிய விலை மாற்றங்கள் குறித்து இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.

தற்போதைய நெருக்கடியால் இலங்கைப் பொருளாதாரத்துக்கு ஏற்படும் நேரடிப் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

* தடையற்ற வலுசக்தி விநியோகம்: நாட்டின் எரிசக்தித் தேவையை எவ்விதத் தடையுமின்றி உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

* விலை முகாமைத்துவம்: பொருளாதாரச் சுருக்கத்தைத் தவிர்க்கும் வகையில், அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை முறையாக முகாமைத்துவம் செய்தல்.

* நிவாரணத் திட்டங்கள்: பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை உடனடியாக ஆராய்தல்.

* நிலைபேறான வளர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட பொருளாதார வெற்றிகளை எவ்விதச் சரிவுமின்றித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுதல்.

இக்கலந்துரையாடலில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.