சவால்களை வெல்வார் அநுர – முன்னாள் அமைச்சர் மனுஷ நம்பிக்கை.

நாட்டின் தற்போதைய சவால்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் எனத் தான் நம்புவதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை என்பது ஒரு உலகளாவிய ரீதியிலான சவாலாகும். இந்த நாடு மீண்டும் ஒரு வீழ்ச்சிக்குச் செல்லாமல் பாதுகாப்பதிலேயே நாம் எப்போதும் கவனம் செலுத்தி வருகின்றோம். எனவே, எந்தவொரு காரணத்துக்காகவும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அரசு தோல்வியடைய வேண்டும் என்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை.

நாட்டின் மக்கள் தற்போது ஒரு புத்திசாலித்தனமான தீர்மானத்தை எடுத்துள்ளனர். பட்டதாரிகள், விசேட நிபுணர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் எனப் பல்துறை சார்ந்த அறிஞர்களை உள்ளடக்கிய 159 பேர் கொண்ட ஒரு பலமான குழுவை அவர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரலாற்றைச் சான்று காட்டிப் பேசக்கூடிய சிறந்த ஆற்றல் கொண்டவர். அத்துடன், நாடாளுமன்றத்தில் நீண்டகால அனுபவம் கொண்டவர். எனவே, மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த 159 அறிஞர்களுடனும் இணைந்து, அவர்களது ஆலோசனைகளைப் பெற்று இந்த நெருக்கடியை அவரால் வெற்றிகரமாகக் கையாள முடியும் என நாம் நம்புகின்றோம்.

எந்தவொரு அரசியல்வாதியும் இந்த நேரத்தில் நாடு வீழ்ச்சியடைவதையோ, மக்கள் மீண்டும் வரிசைகளில் நிற்பதையோ அல்லது விவசாயம், சுற்றுலா மற்றும் கைத்தொழில் துறைகள் பாதிக்கப்படுவதையோ விரும்பக் கூடாது. இந்த அனைத்து துறைகளையும் பாதுகாத்து முன்னேற்றுவதே தற்போதைய அவசியமாகும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.