சாவகச்சேரியில் கோர விபத்து டிப்பர் – ஓட்டோ நேருக்கு நேர் மோதி தாயும் மகளும் பரிதாப உயிரிழப்பு! – இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்…
யாழ்ப்பாணம், சாவகச்சேரி – சரசாலை கனகம்புளியடிப் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் தாயும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
இன்று காலை 8.30 மணியளவில் மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கிப் பயணித்த ஓட்டோவும், புத்தூரிலிருந்து மீசாலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும் சரசாலைப் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
விபத்தின் போது ஓட்டோவில் நால்வர் பயணித்துள்ளனர். மோதிய வேகத்தில் ஓட்டோ பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்த தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஓட்டோவின் சாரதியும், அதிலிருந்த மற்றுமொரு பெண்ணும் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.
காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டுச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை குறித்து வைத்தியசாலை வட்டாரங்கள் கண்காணித்து வருகின்றன.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியைச் சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




