யாழ். பல்கலை விரிவுரையாளர் தயாளினி அடித்துப் படுகொலை! – மருமகன் கைது; மகள் உடந்தை * தனங்களப்பில் சடலம் மீட்பு * கடத்தல் நாடகம் அம்பலம்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச் சித்த மருத்துவபீட விரிவுரையாளர் தயாளினி திலீபன், தனது மருமகனாலேயே படுகொலை செய்யப்பட்டு, சடலம் தனங்களப்பு காற்றாலைப் பகுதியில் வீசப்பட்டிருந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக விரிவுரையாளரின் 19 வயது மகளும், 21 வயது மருமகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்த விரிவான விவரங்கள் வருமாறு:-

கடத்தல் நாடகமும்
பொலிஸ் விசாரணையும்

கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம், பாண்டியன்தாழ்வுப் பகுதியில் உள்ள விரிவுரையாளரின் வீட்டிலிருந்து, அவரும் அவரது மகளும் கடத்தப்பட்டனர் என்று விரிவுரையாளரின் மகனால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. மகளின் கணவனால் மேற்படி இருவரும் கடத்தப்பட்டனர் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் நடத்திய ஆய்வில், வீட்டின் ஓடுகள் கழற்றப்பட்டிருந்ததுடன், கயிறு மூலம் எவரோ தப்பிச் சென்றதற்கான தடயங்களும், அறுந்து கிடந்த தலைமுடிகளும் கண்டெடுக்கப்பட்டன. இது திட்டமிடப்பட்ட ஒரு குற்றச்செயல் என்பதை உறுதிப்படுத்திய பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டனர்.

தொழில்நுட்ப உதவியுடன்
தேடுதல் வேட்டை

சந்தேகநபரைப் பிடிக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய பொலிஸார், பரந்தன் பகுதியில் உள்ள ஏ.ரி.எம். இயந்திரத்தில் சந்தேகநபர் பணம் எடுத்தமையை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து, திருகோணமலைப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கியூ.ஆர். குறியீட்டைப் பயன்படுத்தி வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பியமையும் கண்டறியப்பட்டது. அங்கிருந்த சி.சி.ரி.வி. காட்சிகளின் உதவியுடன் விரட்டிச் சென்ற பொலிஸார், நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலையில் வைத்து விரிவுரையாளரின் மகளையும் அவரது கணவனையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

படுகொலைக்கான
காரணம் அம்பலம்

யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்ட இருவரிடமும் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், விரிவுரையாளர் தயாளினி படுகொலை செய்யப்பட்டமை உறுதியானது. மகளின் திருமணத்துக்கு மாமியார் கடும் எதிர்ப்புத் தெரிவித்தமையால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மருமகன் மாமியாரைக் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ளமை அம்பலமானது.

சடலம் மீட்பு

கொலையை மறைப்பதற்காக மகளும் மருமகனும் இணைந்து கடத்தல் நாடகமாடியுள்ளனர். பின்னர் சடலத்தைத் தனங்களப்பு காற்றாலைப் பகுதிக்குக் கொண்டு சென்று வீசிவிட்டுத் தப்பியோடியமையை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று சடலம் குறித்த பகுதியிலிருந்து மீட்கப்பட்டது.

பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தனது குடும்ப உறுப்பினராலேயே இவ்வாறு கோரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் யாழ். குடாநாட்டையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.