மத்திய கிழக்கு போர்ச் சூழலால் இலங்கைக்குப் பாரிய நெருக்கடி மே 1 முதல் எரிபொருள் விலைகள் தாங்க முடியாத அளவுக்கு உயரும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையில் எரிபொருள் விலைகளை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்குப் பாரியளவில் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்து வருகின்றமை மற்றும் போர்ச் சூழலால் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்கான பாதுகாப்புச் செலவுகள் உயர்வடைந்துள்ளமை இலங்கையின் எரிபொருள் விலையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய விலை அதிகரிப்புக்கு மத்தியிலும், ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவும், பெற்றோலுக்கு 20 ரூபாவும் அரசால் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிலவும் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் எரிபொருள் பயன்பாட்டைத் தாமாகவே முன்வந்து மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

சர்வதேச நெருக்கடிகளால் இவ்வாறான கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்றும், நிலைமை சீராகாவிட்டால் மே மாதம் முதலாம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள விலைத்திருத்தத்தின் போது மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு விலை உயர்வு அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அடிக்கடி எரிபொருள் விலைகளை உயர்த்துவதற்கு அரசு விரும்பவில்லை என்ற போதிலும், உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் இதற்குப் பிரதான காரணியாக அமைந்துள்ளது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் இதன்போது விளக்கமளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.