இலங்கையின் சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி! இம்மாதம் 18 நாள்களில் ஒரு இலட்சம் பேர் வருகை!!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், மார்ச் மாதத்தின் முதல் 18 நாள்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 410 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 6 இலட்சத்து 66 ஆயிரத்து 65 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. , மார்ச் மாதத்தின் முதல் 18 நாள்களில் மாத்திரம் இந்தியாவிலிருந்து 27 ஆயிரத்து 353 பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யா, சீனா, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி சபையின் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதில் சுற்றுலாத்துறையின் இந்தத் திடீர் எழுச்சி முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மார்ச் மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று சுற்றுலாத்துறை நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.