அரசியல் அழுத்தத்துக்கு அடிபணிய வேண்டாம்! – அரச அதிகாரிகளுக்கு நீதி அமைச்சர் அறிவுறுத்தல்.

அரச அதிகாரிகள் தனிப்பட்ட தலையீடுகள் அல்லது அரசியல் அழுத்தங்கள் இன்றி, சட்டத்துக்கும் மக்களின் தேவைக்கும் ஏற்ப சுதந்திரமாகத் தமது கடமைகளை முன்னெடுப்பதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்தார்.

நீதிமன்றங்களுக்கு வருகை தரும் நபர்கள் எத்தகு அந்தஸ்துடையவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் கௌரவத்துடன் நடத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

நீதிமன்ற பாதுகாப்பு III ஆம் தரப் பதவிகளுக்காகப் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட அதிகாரிகளுக்கான விழிப்புணர்வுத் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக இந்நிகழ்வு நேற்று நடைபெற்றது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சால் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில், நீதிமன்ற பாதுகாப்புப் பணிகளுக்காக 69 பேர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் எவ்வித வெளித்தரப்பு அழுத்தங்களுக்கும் அடிபணியாது, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நேர்மையாகச் செயற்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நீதித்துறையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில், நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்களுடன் பண்பாக நடந்துகொள்வதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.