யுத்தம் நாளைக்கே முடிவுக்கு வந்தாலும் பொருளாதாரப் பாதிப்பு விரைவில் தீராது! – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்.

மத்திய கிழக்குப் போர் நாளைக்கே முடிவுக்கு வந்தாலும், எண்ணெய் உற்பத்தி உட்கட்டமைப்புகள் மீது ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் ஒரே இரவில் நீங்கிவிடாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடி நிலை தணியும் வரை மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்குமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஏனைய பொருள்களின் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படும் துறைகளைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு நிதி அமைச்சு தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

மின்சார விநியோகத்தைத் துண்டிக்கும் எண்ணம் தற்போது அரசுக்கு இல்லை என்று கூறிய அவர், விலைகள் அதிகரித்த போதிலும் மின்சாரம் மற்றும் எரிபொருளைத் தடையின்றி வழங்குவதே அரசின் பிரதான நோக்கம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.