அம்பலாந்தோட்டையில் எரிபொருள் பதுக்கல்: 2 ஆயிரத்து 200 லீற்றர் டீசலுடன் 80 வயது வயோதிபர் சிக்கினார்!
உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி பெருமளவிலான எரிபொருள்களைச் சட்டவிரோதமாகச் சேமித்து வைத்திருந்த ஒருவர், அம்பலாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹுங்கம பொலிஸார், அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமடல பகுதியில் நேற்றுமுன்தினம் முன்னெடுத்த சோதனையில், 11 பீப்பாய்களில் அடைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 200 லீற்றர் டீசல் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக அம்பலாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அம்பலாந்தோட்டையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஜங்சகம, மாமடல பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நாட்டில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு குறித்த அச்சம் நிலவி வரும் சூழலில், இவ்வாறான சட்டவிரோதச் சேமிப்புகள் குறித்து பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
