பசுமை எதிர்காலத்தை உருவாக்க வலுவான தொழிற்கல்வி அவசியம் – சர்வதேச மாநாட்டில் பிரதமர் ஹரிணி வலியுறுத்து.
வலுவான தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி முறைமையானது (TVET), தனிநபர்களுக்கு நடைமுறைச் சாத்தியமான மற்றும் எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களைப் பெற்றுக்கொடுப்பதுடன், பசுமையான நிலையான எதிர்காலத்தை நோக்கிய புத்தாக்கங்களை உருவாக்கவும் வழிவகுக்கின்றது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸின் கொழும்புத் திட்ட உத்தியோகத்தர் கல்லூரி (CPSC) மற்றும் இலங்கையின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘காலநிலைத் தன்மைகளுக்குத் தாக்குப் பிடித்தல் மற்றும் பசுமை வேலைவாய்ப்புகளுக்காக TVET முறைமைகளை மாற்றுதல்’ எனும் தலைப்பில் இம்மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
பிரதமர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“மார்ச் 23 முதல் 27 வரை நடைபெறும் ‘டிஜிட்டல், பசுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்காக TVET முறைமையை உருமாற்றுதல்’ எனும் ஐந்து நாள் பிராந்திய வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாக இம்மாநாடு அமைகின்றது. இதில் பூட்டான், பீஜி, மலேசியா, மாலைதீவு, மியன்மார், நேபாளம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய கொழும்புத் திட்ட உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, காலநிலை மாற்றம் மற்றும் பசுமைத் திறன் மேம்பாடு குறித்த உயர்மட்டக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் TVET முறைமை முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்தத் துறையில் முறையான மாற்றங்களை ஏற்படுத்துவது இலங்கையின் தேசிய முன்னுரிமையாகும். கல்வி என்பது வெறும் அறிவைப் பரப்புவதுடன் நின்றுவிடாது, அது தனிநபர் வாய்ப்புகள், கௌரவம் மற்றும் சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் ஆற்றலைப் பெற்றுக்கொடுப்பதாக அமைய வேண்டும்.
பாடத்திட்டங்களில் பசுமைத் திறன்களை உள்ளடக்குதல், புதிய பயிற்சி வசதிகளில் முதலீடு செய்தல் மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைக் கல்வி முறையில் ஒருங்கிணைக்க வேண்டும். குறிப்பாக, பசுமை மாற்றத்தினால் உருவாகும் வாய்ப்புகள் இளைஞர்கள், இளம் பெண்கள், விசேட தேவையுடையோர் மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள் உட்பட அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும்.” – என்றார்.
பிராந்திய மற்றும் சர்வதேசப் பங்களிப்புகளுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், அத்தகைய உறவுகளை உண்மையான நன்மைகளாகவும் செயற்திறன் மிக்க கூட்டுறவுகளாகவும் மாற்றுவதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, மேலதிக செயலாளர் சமந்தி சேனநாயக்க, கொழும்புத் திட்ட உத்தியோகத்தர் கல்லூரியின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் கலாநிதி சுரேஷ் கே. தமேஜா மற்றும் பல உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
