யாழ். மணல்காட்டில் பொலிஸார் அட்டகாசம்! சுற்றுலாப் பயணிகள் மீது கோரத் தாக்குதல்!! – இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்.
பருத்தித்துறையிலிருந்து மணல்காடு பகுதிக்குச் சுற்றுலா சென்றவர்கள் மீது, மதுபோதையில் இருந்த சிவில் உடைப் பொலிஸார் மேற்கொண்ட கோரத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்து மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸாரே இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மணல்காடு கடற்கரைப் பகுதிக்குச் சுற்றுலாச் சென்றிருந்த குழுவினர் மீது, அங்கு பொலிஸ் திணைக்களத்துக்குச் சொந்தமான வாகனத்தில் வந்திறங்கிய குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலை நடத்தியவர்கள் சிவில் உடையில் இருந்தமையுடன், மேல் ஆடையின்றி மது அருந்திக்கொண்டிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மதுபோதையில் இருந்த மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர்கள் எவ்வித காரணமுமின்றி சுற்றுலாப் பயணிகளை வழிமறித்துக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இருவர் உடனடியாக மீட்கப்பட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் திணைக்கள வாகனத்திலேயே வந்து, மதுபோதையில் பொதுமக்கள் மீது இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதலை பொலிஸார் நடத்தியுள்ளமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைத் துறைசார் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
