ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கைக்கு பாரிய நிதியுதவி – 480 மில்லியன் டொலராக அதிகரிப்பு.
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 480 மில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கும், அதில் 200 மில்லியன் டொலர்களை உடனடியாக இலங்கைக்கு வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கண்டா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர், இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்த போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பது குறித்து இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
‘டித்வா’ அனர்த்த நிலைக்குப் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
பேரிடருக்குப் பிந்தைய நிலைமை மற்றும் தற்போதைய மத்திய கிழக்கு போர்ச் சூழலுக்கு மத்தியிலும், பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கித் தலைவர் இதன்போது பாராட்டுத் தெரிவித்தார்.
‘டித்வா’ சூறாவளியினால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைக்கத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் கண்டறிந்ததாகக் குறிப்பிட்ட அவர், மத்திய மலைநாட்டின் நீர் கட்டமைப்புகளைப் பாதுகாத்து, மீண்டும் இத்தகையதொரு பாதிப்பு ஏற்படாதிருக்கத் தேவையான திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அனர்த்த நிலைமையின் போது ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய உதவிகளைப் பாராட்டிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரமாகப் பேணி நீடித்த பொருளாதார அபிவிருத்தியை எட்டுவதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பு எனத் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்திய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சோனா சிரேஸ்தா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
