மாயமான இரத்தினக்கல் வர்த்தகர் சுரங்கக் குழிக்குள் சடலமாக மீட்பு!
கஹவத்தை பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போயிருந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர், நீலகம பகுதியிலுள்ள சுரங்கக் குழி ஒன்றுக்குள் இருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கஹவத்தை, கட்டாங்கே பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் கஹவத்தை – நீலகம வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போதே இவர் மர்மமான முறையில் காணாமல்போயிருந்தார்.
வர்த்தகர் காணாமல் போனதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் சில தடயங்கள் கண்டறியப்பட்டன.
அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் அதே வீதியின் வளைவு ஒன்றுக்கு அருகில் நிறுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
அவரது அலைபேசி நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளின் பலனாக, நேற்று திங்கட்கிழமை நீலகம பகுதியிலுள்ள கைவிடப்பட்ட சுரங்கக் குழி ஒன்றிலிருந்து வர்த்தகரின் சடலம் மீட்கப்பட்டது.
இது கொலையா அல்லது விபத்தா என்பது குறித்து கஹவத்தை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
