கிளிநொச்சிக்கு வரலாற்றுப் பெருமை! முழுத் தமிழினத்துக்கும் இது மகுடம்!! – சாதனை மாணவர்களுக்கு சிறீதரன் எம்.பி. புகழாரம்.
“கல்வி மற்றும் வளங்கள் ரீதியாகப் பின்தங்கிய மாவட்டம் என விமர்சிக்கப்பட்ட கிளிநொச்சியிலிருந்து மாணவர் ஒருவர் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளமையானது, எமது மண்ணின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய அடையாளத்தைப் பதித்துள்ளது” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் அகில இலங்கை ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் முதலிடங்களைப் பெற்ற கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இன்று கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு விஜயம் செய்து, கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற செல்வன் தெய்வேந்திரன் திருக்குமரன், உயிரியல் பிரிவில் கிளிநொச்சி மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற செல்வன் ஆனந்த் கிருசோந், வர்த்தகப் பிரிவில் கிளிநொச்சி மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற செல்வி கமலநாதன் மதுமினி ஆகியோரை நேரில் சந்தித்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், “இந்த வெற்றி கிளிநொச்சி மாவட்டத்துக்கு ஒரு வரலாற்றுப் பெருமையைத் தேடித் தந்துள்ளது. பல சவால்களுக்கு மத்தியிலும் எமது மாணவர்கள் ஈட்டியுள்ள இந்தச் சாதனை ஒட்டுமொத்தத் தமிழினத்துக்கும் பெருமிதமானது. இந்த வெற்றிக்காகக் கடினமாக உழைத்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.
இந்தச் சந்திப்பில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி மண்ணிலிருந்து உருவான இந்தத் தேசிய மட்டத்திலான சாதனை, எதிர்கால மாணவர்களுக்கு ஒரு சிறந்த உந்துசக்தியாக அமையும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
