வழக்கில் உள்ள விடயங்கள் குறித்து தவறாக செய்தி வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பு! – விரிவுரையாளர் தயாளினி கொலை வழக்கில் மன்று எச்சரிக்கை.
நீதிமன்ற நடவடிக்கை உள்ள விடங்களில் ஊடகங்கள் செய்தி பிரசுரிக்கும்போது உண்மைக்கு அப்பால் சென்று பிரசுரிப்பதும் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்று யாழ்ப்பாணம் நீதிவான் எஸ்.லெனின்குமார் தெரிவித்தார்.
படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி திலீபன் தயாளினியின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போதே நீதிவான் மேற்கண்டவாறு கூறினார்.
வழக்கு விசாரணையின்போது முதலாம் சந்தேகநபரான தயாளினியின் மருமகன் தொடர்பில் சட்டத்தரணி எவரும் மன்றில் முன்னிலையாகவில்லை. சட்டத்தரணி இல்லாது விடினும் நேரடியாக ஏதும் விடயம் மன்றில் தெரிவிக்க விரும்புகின்றீர்களா என நீதிவான் கோரிய போதும் முதலாம் சந்தேகநபர் ஏதும் தெரிவிக்கவில்லை.
இதேநேரம் இரண்டாம் சந்தேகநபரான பெண் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சமிந்த அத்துக்கோரளை கொலைக்கான பின்னணி தொடர்பில் மன்றில் சமர்ப்பணம் முன்வைத்தார்.
இதன்போது சந்தேகநபரான மருமகனுக்கு எதிராக அவரது நடத்தை தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் உள்ளன என்றும், அவற்றையொட்டி சில பிணை நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அவர் வெளியில் விடப்பட்டிருந்தார் என்பதை சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்டவர் வாழும் கிராம சேவகர் பிரிவு எல்லைக்குள் பிரவேசிக்கக் கூடாது என ஒரு கட்டளையும், 2 ஆம் சந்தேகநபர் கல்வி கற்கும் பாடசாலை மற்றும் 2 ஆம் சந்தேகநபர் செல்லும் எந்த இடத்துக்கும் செல்லக் கூடாது என்ற கட்டளையும் ஏற்கனவே மன்றினால் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
தவிரவும் விவாகரத்து வழக்கும் தொடரப்பட்டு இருந்தது. இவை அனைத்தையும் மீறி முதலாவது சந்தேகநபர் செயற்பட்டுள்ளார்.
இதேநேரம் இக் கொலை இடம்பெற்றதான சம்பவ தகவல் வெளியான மறுநாளே உயிரிழந்தவரின் மகளும் 2 ஆம் சந்தேகநபருமான எனது கட்சிக்காரர், உயிரிழந்தவரின் காலை அழுத்திப் பிடித்திருக்க முதலாம் சந்தேகநபர் கழுத்தை நெரித்தார் என முதலாம் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார் என ஊடகங்களும், சமூக ஊடகங்களும் செய்தியிட்டுள்ளன.
சந்தேகநபர் ஒருவர் வழங்கியதாகக் கூறப்படும் வாக்குமூலமானது, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பொலிஸாரின் ‘பி’ அறிக்கையில் இடம்பெற வாய்ப்பில்லை. அவ்வாறிருக்கையில், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் இவ்வாறான தகவல்களை வெளியிடுவது பொலிஸாரின் முறையான புலன் விசாரணைகளைக் குழப்புவதுடன், சமூகத்தில் தவறான கருத்துக்களைத் தோற்றுவிக்கும். இது ஒரு தெளிவான நீதிமன்ற அவமதிப்புச் செயலாகும் என்று சட்டத்தரணி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேநேரம் பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பாதிக்கப்பட்டவரின் மகனிடம் உயிரிழந்தவரின் கைப்பட எழுதிய சில ஆவணங்களும், உயிரிழந்தவர் கடைசி நாள் வரை பயன்படுத்திய கைத்தொலைபேசியும் உள்ளன. அதனையும் புலன் விசாரணைக்கு உட்படுத்தினால் மேலதிக தகவல்கள் கிடைக்ககூடும் எனக் கருதி அவர் ஒப்படைக்கத் தயாராகவுள்ளார் என்று மன்றில் தெரிவித்தார்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறியது போன்று நான் பாதிக்கப்பட்டவர் சார்பில் மன்றில் முன்னிலையானபோது, சந்தேகநபர்கள் சார்பில் எந்த சட்டத்தரணியும் ஆஜராகவில்லை. அது நீதிமன்றப் பதிவேட்டிலும் குறிக்கப்பட்டுள்ளது.
‘பாதிக்கப்பட்டவருக்காகவே எம்.ஏ.சுமந்திரன் ஆஜரானார்’ என மன்று ஆவணத்தில் தெளிவாக குறிப்பிட்ட பின்பும் சில ஊடகங்களும், சமூக வலைத்தள ஊடகங்களும் பொய்யாக நான் 2 ஆம் சந்தேக நபர் சார்பில் ஆஜரானேன் என செய்திகளைப் பரப்புகின்றன என்றார்.
இவற்றை ஆராய்ந்த நீதிவான் லெனின்குமார், “ஊடகவியலாளர்கள் நேரில் வந்து நீதிமன்ற ஆவணங்களைப் பார்வையிட முடியும் அல்லது வழக்கு விசாரணையின்போதும் நேரில் வந்து குறிப்பெடுத்து செய்தியிட முடியும். ஆனால் உண்மைக்கு அப்பால் செய்தி பிரசுரிப்பது நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும்” என்று எச்சரித்தமையோடு சந்தேகநபர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.
