கொத்மலையில் கோர விபத்து! 70 அடி பள்ளத்தில் வீழ்ந்த வான்!! – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் படுகாயம்.

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில், கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் இன்று அதிகாலை வான் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், வானில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மற்றும் ஒரு விற்பனை உதவியாளர் என மொத்தம் ஐவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரைப் பார்த்துவிட்டு, மீண்டும் கொத்மலை தவலந்தென்ன நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே விபத்தில் சிக்கியுள்ளனர். வானை அதன் உரிமையாளரே செலுத்தியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தானது கெரண்டி எல்ல பகுதியில் ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் விபத்துக்குள்ளான இடத்துக்கும் அருகிலேயே இடம்பெற்றுள்ளது. இப்பகுதி மிகவும் அபாயகரமானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.