சாவகச்சேரி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: இரு வழக்குகளிலும் இன்றும் தீர்ப்பு இல்லை!

சாவகச்சேரி பிரதேச சபை மற்றும் சாவகச்சேரி நகர சபை ஆகியவற்றுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை தள்ளுபடி செய்யக்கோரி தொடுக்கப்பட்ட வழக்குகளின் தீர்ப்பு யாழ்ப்பாணத்தில் இயங்கும் வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் தீர்ப்பு இன்றும் வழங்கப்படவில்லை.

இந்த வழக்குகள் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி சூசைதாசன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு முடிவடைந்து இருந்தது. தீர்ப்பு வழங்குவதற்காக ஏற்கனவே இரண்டு திகதிகள் குறிப்பிடப்பட்டு, அதன் பின்னரும் அந்த திகதிகளில் தீர்ப்பு வழங்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்றும் தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் வழங்கப்படவில்லை.

இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுமா அல்லது வழக்கை விசாரித்த நீதிபதி சூசைதாசன் இந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை தாமே வழங்குவாரா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

நீதிமன்றங்கள் புதுவருடத்தையொட்டி இன்றைய தினத்துடன் விடுமுறைக்காக மூடப்படுகின்றன. இனிமேல் ஏப்ரல் 23 ஆம் திகதிதான் நீதிமன்றங்கள் மீண்டும் கூட இருக்கின்றன. அப்படி இருக்கையில் 22ஆம் திகதி முதல் தமக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்துக்கு மாற்றம் வந்திருப்பதாக நீதிபதி சூசைதாசன் தெரிவித்தார்.

இந்த வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்குமாறு தாம் விசேடமாகப் பணிக்கப்பட்டால் மட்டுமே நாம் வந்து இனிமேல் தீர்ப்பை வழங்க முடியும் என்று அவர் இன்று மன்றில் தெரிவித்தார்.

கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ் ராஜா யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் பெறுகின்றார்.

இனிமேல் சாவகச்சேரி உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான தேர்தல் வழக்குகள் மீண்டும் புதிய நீதிபதி முன்னிலையில் புதிதாக விசாரணை செய்யப்படுமா அல்லது வழக்க்குகளை இதுவரை விசாரித்த பழைய நீதிபதி வந்து இந்த வழக்கின் தீர்ப்பை வழங்குவாரா என்பது இப்போது வரை தெளிவாகவில்லை.

Leave A Reply

Your email address will not be published.